Monday, September 17, 2012

சோளம் நினைக்கையிலே......

என்னுள் கதிராய் முளைத்து....
உதிரா பூக்களாய் மலர்ந்து.... 
சதிராய் எங்கும் தெளித்து....
நான் மருங்கி நிற்கையிலே........ , 
சோளம் முறைத்துக் கூறியது,
“ என்னை முறைத்து

ப் பார்த்தது போதும்.....,
போற்றிப் பாடடி பெண்ணே”!.....

அவ்வளவு தான், மடை திறந்த வெள்ளமாய் இதோ தெம்மாங்கு பாட்டு......:

                                                        (பல்லவி)
                                       
                                        மஞ்சள் பல் அழகி.....
                                        மயக்கும் உடை அழகி....
                                        மண்ணில் நீ சாயும் வரை.....
                                        மங்காத சிரிப்பழகி.....                                         (மஞ்சள்)

                                                         (அனு பல்லவி)
                                     
                                        குழந்தை முதல் கிழவன் வரை.....
                                        கிள்ளத் துடிக்கும் உன் உருவம்.....
                                        ஏழை முதல் செல்வ்னதனும்.....
                                        ஏக்கமுடன் உருகும் உருவம்....                       (மஞ்சள்)
                                                       
                                                                 (சரணம்)


                                       உள்நாடு வெளிநாடு பேதமில்லை உன்னோடு.....
                                       
உன்னுடனே பல காலம் வாழ்க்கை நடத்தும் ஏழை நாடு....

                                         


                                       மறையாதடி உன் புகழ்.....
                                       மனிதன் மண்ணில் மறையும்                           (மஞ்சள்)

“ உயிர் ஜனித்து வா”

நீண்ட வாழ்க்கை உன்னுடன் களித்திட்ட 

காலத்தையும்....!

நீங்காத கனவுகளில் உளரிய காலத்தையும்....!



நீர் தெளித்துக் களித்து விளையாடிய காலத்தையும்......!

நீ பொய்க்கோபம் கொண்டு கடிந்திட்ட 





காலத்தையும்....!

நீ மடி சுமந்து எங்களை மகிழ்வித்த காலத்தையும்....!

நீ இன்றி நாங்கள் தவித்திட்ட காலத்தையும் சுமந்து....!

நீங்காத நினைவாய் எங்களுள் புதைந்திட்ட’ 





தந்தையே....!

நீ மடி சாய்ந்து நாங்கள் கூறும் கதைகள் கேட்க.....!

நீ மீண்டும் உயிர் ஜனித்து வா....!!!!

” சிந்திக்க சில மணித்துளிகள்” - செவிலியர்கள்



# நான் முதல் முதலாக எழுதும் கட்டுரை இது என்பதினாலும், செவிலியர்களின் சார்பாக எனக்கு எழுத வாய்ப்பு கிடைத்ததை நழுவவிட விரும்பாததினாலும்,பல நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்களினாலும்,  பல வேலைகளுக்கிடையிலும், தொடர்ந்து தொல்லை கொடுக்கும் “மின் வெட்டி”னையும் பொருட்படுத்தாமல் இன்று உங்களிடம் பகிர்கின்றேன்.....

பெண்களின் சிறப்புப் பண்புகளில் மிக முக்கியமான ஒன்று பொறுமை.... அவளைப் பெருமை சேர்க்கும் பண்பும் அது தான் என்றால் மிகையாகாது.....

எந்த பிரச்சனைகள் என்றாலும் அதனைப் பொறுமையுடன் ஆராய்ந்து , அதற்கான வழிமுறைகளைத் தேடி தீர்வுகாண்பவளும் பெண் தான்......
(பிரச்சனையே பெண் தான் என்பவர்களுக்கு தெரியும் அந்த பிரச்சனைக்குக் காரணமும், அதனை தீர்ப்பவளும் பெண் தான் என்பது).....

அதனால் தான், அந்த காலம் தொட்டே! பெண்களுக்கென்று சில வேலைகளை நியமித்து இருந்தார்கள் நம் முன்னோர்கள் காரணம் அவளின் உடல் வாகும், குணாதிசயங்களும்....

குழந்தைகளின் அன்றாடத் தேவைகளைத் தாயை விட யாரால் செய்துவிட முடியும் , குளிப்பாட்டி, சுத்தம் செய்து,உணவைப் புகட்டி, அறிவு வளர்த்து, விருப்பு வெறுப்புக்களை உணர்ந்து அதன் படி நல்ல ஆரோக்கியத்துடன் (உடல், மனம்) வளர்த்திட .....

தன் மக்களுக்குச் செய்யும் அதே தாய் (தாய்மை) மற்ற குழந்தைகள், உறவினர், சுற்றத்தார், முதியவர், இயலாமல் இருப்போர் போன்றவர்களுக்கும் செய்வதும் இலகுவாகிவிடுகின்றது.....

ஒரு பெண்ணால் பல அரிய வேலைகள், செயல்கள், தொழில்கள் என்று பல வகையிலும் மிளிரும் தன்மை இருந்தாலும், பெண்கள் பெரிதும் விரும்பி ஏற்கும் வேலை ஆசிரியைப் பணியும், செவிலிப் பணியும் தான் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருந்துவிட முடியாது எனபது என் உறுதியான எண்ணம்....

ஆசிரியைப் பணிக்கு “கல்வி அறிவு” மிகவும் அவசியமான ஒன்று
(இன்று ப்ளஸ் டூ ஃபெயில் ஆனாலும் அடெம்ண்ட் மூலம் பாஸ் செய்து “டீசர்ஸ் ட்ரெய்னிங்”இல் அதிக பணம் கொடுத்துப் பணம் சேர்த்து , பெண்ணை அரசாங்க வேலைக்கு தயார் படுத்தும் காலம்.... பாவம் மாணவர்கள்)

அனைத்து சமூகத்தினர், படிப்பறிவு குறைந்த பலரால் ஆசிரியைப் பணியைச் சிறப்புடன் செய்துவிட முடியாது எனபதினால் பெரும்பாலும் பெண்கள் தேர்ந்தெடுக்கும் அடுத்த பணி “செவிலியர்” பணி......

“செவிலியர்” பணிக்கும் அடிப்படை படிப்பு இருந்தாலும் , செயல் முறை அறிவு அவர்களுக்கு அதிகம் கற்றுத்தரப்படும், அவசியமும் கூட..... அந்த செயல் முறையை வைத்துத்தான் அவர்களின் தரம், பதவி உயர்வு கணக்கெடுக்கப் படும்.....

செவிலியர் செவிலித்தாயிலிருந்து மருவி வந்த பெயராக இருந்திருக்கலாமோ என்ற ஐயம் எனக்கு எப்போதும் உண்டு....
ஆங்கிலத்தில் “நர்ஸ்” என்று பொதுவாக அழைக்கப்படும் வார்த்தை (பராமரிக்கும் பணியை செய்பவள் (குழந்தை முதல் முதியவர்வரை) )....
ஒருவரை ஒருவர் விளித்துக் கூற “சிஸ்டர்” என்பது வசதியாக இருந்தமையால், அந்தப் பெயர் இன்று பொதுப்பெயராயிற்று.....

அப்பாடா, இப்போது தான் கட்டுரையின் நடுப்பகுதிக்கு வர முடிந்தது, முகவுரையை முடித்து.....
நான் சிறுவயதாக இருந்த போது வியந்த பணியில், இந்த “நர்ஸ்” பணியும் ஒன்று....

எவ்வாறு இவள் ஒருத்தியே, அத்தனை நோயாளிகளின் குறைகளைக் கேட்டு அதனை பக்குவமாக அவர்களுக்குப் புரியவைத்து, மருத்துவரின் ஆலோசனை, அறிவுரையை அவர்களுக்கு உணர்த்தி, ஊசியை அவர்களுக்கு வலி தெரியாமல் பேச்சில் திசை திருப்பி, சிரித்த முகத்துடன் அனைவரையும் வழி அனுப்ப முடிகின்றது .
(நான் கூறியது 25 வருடங்களுக்கு முன் என்பதையும் மறந்துவிட வேண்டாம்)

அவர்களால் விதைக்கப்பட்ட விதையோ என்னுள் மருத்துவம் படிக்கத் தூண்டியது (ஐயோ! நீங்க டாக்டரா என்று வாய் பிளக்க வேண்டாம்)....

அந்த “சகிப்புத்தன்மை” என்னுள் பல மாற்றங்களை உருவாக்கியது....
என்னுள் உள்ள மென்மையும், எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் பாங்கும், எதிரே இருப்பவர்களின் மன ஓட்டத்தை அறிந்து அதன் படி பேசும் ஆற்றலும், முடியாமல் வருந்தும் எந்த உயிரையும் மதிக்கும் பண்பு என்று எவ்வளவோ அடுக்கிக் கொண்டே போகலாம்....

மேல் படிப்பு படித்து மருத்துவம் பார்க்க ஒரு இடம் அமைத்து அவரால் சிறப்பாகப் பணி செய்துவிட முடியுமா....? ( ஒரு ஆசிரியர், வக்கீல் இப்படிப் பல தொழில் தனி ஒரு மனிதனால் முடியும்).....

பணியில் அவர்கள் காட்டும் அக்கறை, அந்த பொதுநல எண்ணம், சகிப்புத்தன்மை, முகம் சுளிக்காமல் சிரித்த முகத்துடன் சேவை செய்யும் பாங்கு யாருக்கு வரும்....

(இப்போதும் சில மேலே கூறிய தகுதிகளில் ஒன்று கூட தம்முள் வளர்த்துக்கொள்ள முயலாமல் பணி என்ற பெயரில் “மனி” மட்டும் ஈட்டுவதில் குறியாக இருப்பவரும் இருக்கத்தான் செய்கின்றார்கள்)
நாம் நல்ல மனிதர்களைக் கணக்கில் கொள்வோமே!

சரி...! தன்னை பிறருக்காகவே அர்பணித்து வாழ்க்கையை நடத்தும் அவர்களுக்கு சமூகம் கொடுக்கும் அந்தஸ்து தான் என்ன..... ?
நினைக்கவே அருவெறுப்பாக இருக்கின்றது, விலைமாதுவைவிட அவர்களை , அவர்களின் நடத்தைகளுக்கு விமர்சனம் கொடுத்து அவர்களை முத்திரைக்குத்தி அவமானப்படுத்துவது.....
ஒரு நல்ல அங்கீகாரம் கொடுக்க வேண்டிய சமூகம், ஏன் அவர்களில் சிலரின் குறைகளை மிகைப்படுத்தி ஒட்டு மொத்த “செவிலியர்களை” செவிகேட்க முடியாத அளவிற்கு விமர்சனம் செய்கின்றது....

“செய்யும் தொழிலே தெய்வம்” என்பதனை கருத்தினில் கொண்டு, அனைவரும் அவர்கள் செய்யும் பணிக்கு உண்டான மதிப்பையையும், அங்கீகாரத்தையும் தந்து தாழ்மை படுத்தும் எண்ணங்களை சலவை செய்து தூய எண்ணங்களுடன் வாழவேண்டும்......



அவர்களின் குறைகளைத் தவிர்த்து நிறைகளைப் போற்றிப் பாதுகாப்போம்.....

வளரும் நம் சிந்தனையும், நாடும்....
மலரும் அவர்கள் அனைவரின் மனங்களும், முகங்களும்...

Monday, June 25, 2012

“விரும்பினேன்”

                            “ வி ரு ம் பி னே ன் ”



 மலையாய் இருந்திட விரும்பினேன்......
 மருங்காமல் அனைத்தையும் தாங்குவதினால்......


மடுவாய் இருந்திட விரும்பினேன்.....
மறுக்காமல் அனைத்தையும் தேக்குவதினால்......


மழையாய் இருந்திட விரும்பினேன்.....
மண்ணுடன் அனைத்தையும் மகிழ்விப்பதினால்.....


கடலாய் இருந்திட விரும்பினேன்.....
காணும் இடமெல்லாம் பரவிக்கிடப்பதினால்.....


காற்றாய் இருந்திட விரும்பினேன்.....
காலம் தோறும் உயிரனங்கள் ஸுவாசிப்பதினால்.....


காட்டாற்று வெள்ளமாய் இருந்திட விரும்பினேன்.....
கட்டுப்பாடின்றி எங்கும் பாய்ந்து செல்வதினால்.....


தீயாய் இருந்திட விரும்பினேன்.......
தீண்டினால் சுட்டு எரிப்பதினால்......


மலராய் இருந்திட விரும்பினேன்......
மணங்களால் மனங்களை மகிழ்விப்பதினால்......


பறவையாய் பிறந்திட விரும்பினேன்......
பறந்து விரும்பிய இடங்களில் சிறகை விரிப்பதினால்....


ஆணாய் பிறந்திட விரும்பினேன்......
ஆணாதிக்கத்தை  ஒழிக்கவேண்டி இருப்பதினால்.....


பெண்ணாய் பிறந்துவிட்டேன் பெற்றோர் விரும்பியதினால்....
“பெண்ணா இவள்” என்று உலகம் 

வியக்கப்போவதினால்......

Monday, February 6, 2012

”பதங்கமாதல் “

 இந்தத் தலைப்பைப் படித்ததும் நாம் உடனே பள்ளி நாட்களையும், கல்லூரி நாட்களையும் துரத்திச் செல்ல ஆரம்பித்து விடுவோம்......


பதங்கமாதல் என்றால் என்ன நீ சொல்லு என்று என் ஆசிரியை என்னைக் கேட்டு எழுப்பிய நினைவுகளைத்தான் நான் அசை போட்டேன்.....


“திட நிலையில் இருக்கும் பொருளை வெப்பப்படுத்தினால், திரவநிலைக்குச் செல்லாமல் நேரடியாக வாயு நிலைக்கும், குளிர வைத்தால் மறுபடியும் நேரடியாக வாயு நிலையிலிருந்து திட நிலைக்கும் செல்வதைத்தான் நாம் பதங்கமாதல் என்று கூறுகின்றோம்” என்று கூறினேன் அழுத்தம் திருத்தமாய்........


தேர்வில் அதற்குண்டான பதிலை எழுதி மதிப்பெண்களைப் பெற்று கல்விப்பாடத்தில் தேர்வுப் பெற்று வாழ்க்கையில் கால் பங்கு முடித்த  என்னுள் , இன்னும் இந்த “பதங்கமாதல்” ரீங்காரம் இட்டுக்கொண்டுதான் இருக்கின்றது....


நம் மனதினில் இது போன்ற பல விஷயங்கள் “பதங்கமாகி” கரைந்து போவதும் (காற்றில்) உண்டு...... 


அதற்கு கற்பனை வடிவம் கொடுத்து, திட நிலையில் நமக்குத் தேவைப் படும்போது உயிர்ப்பித்து அதனுடன்  வாழ்ந்துக்கொண்டு இருப்பதும் உண்டு.....


இவ்வளவு காலங்களுக்குப் பின் எனக்கு “பதங்கமாதல்” என்பதனை வாழ்வியலுக்கு  ஒப்புமை படுத்தியதில் , உண்மையான பொருள்  இதுவாக  இருக்கக்கூடுமோ என்று  எண்ணத்தோன்றியது....


 திடம்    -------->  திரவம் --------- >                  வாயு
 (உடல்  ----------ரசாயன வாழ்க்கை------- ஆன்மா)




இந்த உடலும் , உயிரும் (ஆன்மா)  நிலையானது (இயல்பியல் பண்பு கொண்டது,)....
வெப்பநிலைக்கு ஏற்ப  உடலும் , ஆன்மாவும் மாற்றம் கொள்ளும்.........
இந்த இடைப்பட்ட “திரவ நிலை” இவற்றின் பங்கு தான்  அந்தப் பொருளின் தன்மையை நமக்குத் தரம் பிரித்துக் காண்பிக்கும்.....


அதன் நிறம், சுவை, மணம், தன்மை, குணம், திறன் (கரைதிறன், 
கொள்திறன்). இந்த திரவ நிலையில் தான் “ரசாயன மாற்றங்கள்” மிக எளிதாக நடைபெறும், அதன் விளைவுகளும், பயன்களும் அந்தப் பொருளின்  தரம்  கண்டு கொள்ள உதவும்......


இந்த திரவ நிலையைப் போல தான் நம்  அனைவரின் உடலில் சேரும் ஆன்மா, வாழ்க்கை என்ற பயணத்தைத் தொடங்கி முடிக்கும் வரை தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகள், 
அதன் பலன்கள்:
ரசாயனத்தில் “வினை ஊக்கி”யின் பங்கு அதிகம், நல்ல வினை யூக்கியும் , அதற்கு உண்டான தட்பவெப்பநிலையும்  பதமாக, இதமாக சிறப்பாக இருந்திடின் கிடைக்கும் விளைவுகளும் மிகச்சிறப்பாக அமைந்திடும்.....


நம் வாழ்க்கையிலும் பல ரசாயன மாற்றத்திற்கு உதவும்  வினையூக்கிகளை நாம் தரம் கண்டு இணைத்துக்கொள்ள வேண்டும், இல்லாது போனால்..........!!!!!
 திரவங்களாய் நம்முள் ஓடும்  அன்பு, பாசம், காதல், நேசம், கோபம், தாபம், துக்கம், மகிழ்ச்சி இதன் சரியான பங்களிப்பு இல்லாமல் போய்விடும்.........




”பதங்கமாதல்” என்னுள் பல சிந்தனைகளை தூண்டிவிட்டது, அதில் சில தங்களுடன் பகிர்ந்தேன், ............. 
பதங்கமாக உங்களுள் உறைந்த உங்கள் நினைவுகளை நீங்களும் அசை போட.........


sublimation:  "solid state will convert to  gaseous state when heating , and gaseous state to solid state when cooled without an intermediate liquid"


Hope all your sublime thoughts will come true one day successfully .........